புதுக்கோட்டை : புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு


புதுக்கோட்டை : புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
x
தினத்தந்தி 23 Nov 2018 4:43 AM GMT (Updated: 23 Nov 2018 4:43 AM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.


சென்னை,

கஜா புயல் கடந்த 16-ந் தேதி அதிகாலை தாக்கியது. இந்த புயலுக்கு நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. கஜா புயலின் கோர தாண்டவத்தால் புதுக்கோட்டை டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சரிந்து விழுந்தன. ஏராளமான வீடுகள், கடைகள் சேதம் அடைந்தன. அடிப்படை வசதிகள் கிடைக்காததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

குறிப்பாக கிராமப்புறங்களில் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 7-வது நாளாக தொடர்ந்து மின்சாரம் இல்லாததாலும், குடிநீர் சரிவர கிடைக்காததாலும் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். இதனால் ஆத்திரம் அடையும் கிராம மக்கள் அவ்வப்போது ஒரு சில இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில் மெழுகுவர்த்தி, பாய், தலையணை, போர்வை போன்ற ஏராளமான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் பாதிப்புக்குள்ளான சில பகுதிகளுக்கு தன்னார்வலர்கள் வாகனங்களில் சென்று உணவு வழங்கி வருகிறார்கள்.

தண்ணீர் லாரி மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்துக்கு 4 குடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை கீழராஜவீதியில் காந்திநகர் மக்களிடம் புயல் சேதங்களை துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.
ஓபிஎஸ் தங்கியிருந்த ஹோட்டல் முன் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டதால் அவர்களை சந்தித்து குறைகளை கேட்டார். 

அதனை தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story