3 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்


3 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டில் இறந்த வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 6:56 PM GMT)

வெளிநாட்டில் உயிர் இழந்த வாலிபர் உடல் 3 மாதங்களுக்கு பின்னர் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

ஸ்பிக்நகர், 

வெளிநாட்டில் உயிர் இழந்த வாலிபர் உடல் 3 மாதங்களுக்கு பின்னர் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

வாலிபர்

தூத்துக்குடியை அடுத்த முத்தையாபுரம் கீதாநகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி ஜோனா பார்க். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சங்கர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ரஞ்சித் ராம்நாத் (வயது 27).

இவர் கடந்த 2017-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் எலக்ட்ரீசியனாக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி பணியில் இருந்த போது ரஞ்சித் ராம்நாத் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

இதனையடுத்து சவுதி அரேபியாவில் உள்ள ரஞ்சித் ராம்நாத் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அவரின் உறவினர்கள், கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுத்தனர். அது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

உடல் தகனம்

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்னர், அவரது உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இருந்து நேற்று அதிகாலையில் முத்தையாபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து சடங்குகள் முடிந்த பின்னர் அவரின் உடல் காலை 10 மணிக்கு முத்தையாபுரத்தில் தகனம் செய்யப்பட்டது.

கீதாஜீவன் எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் மைதீன் கனி, அஜிஸ், சேக் முகைதீன் அலி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆறுதல்கூறினர்.

Next Story