தமிழகம், புதுச்சேரியில் புதிதாக 5,257 பெட்ரோல் நிலையங்கள் திறக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம் அதிகாரிகள் தகவல்


தமிழகம், புதுச்சேரியில் புதிதாக 5,257 பெட்ரோல் நிலையங்கள் திறக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2018 8:53 PM GMT (Updated: 25 Nov 2018 8:53 PM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குனர் ஆர்.சித்தார்த்்தன், தலைமை பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொது மேலாளர் எஸ்.அண்ணாமலை, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பிராந்திய சில்லரை விற்பனை தலைவர் சந்தீப் மகேஸ்வரி மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மாநில சில்லரை விற்பனை தலைவர் வி.நாகராஜன் ஆகியோர் கூட்டாக, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு படிம எரிபொருள் சக்தி முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கேற்ப பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல் விற்பனை 8 சதவீதமும், டீசல் விற்பனை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.

இதன்படி, தமிழகத்தில் 5,125 மற்றும் புதுச்சேரியில் 132 என மொத்தம் 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டீலர்களை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்க புதிய வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான எளிதான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் இருப்பவர்களும், நிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதிகாரிகள் கேட்கும்போது, பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முதன் முறையாக கம்ப்யூட்டர் மூலம் டீலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக அமைந்திருக்கும்.

நகர்ப்புறங்களில் பெட்ரோல் நிலையம் தொடங்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையும், கிராமப்பகுதிகளில் தொடங்க ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையும் செலவாகும். இந்த புதிய பெட்ரோல் நிலையங்கள் நெடுஞ்சாலை பகுதிகள், வயல்வெளிகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் அமைக்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலின் அளவு மற்றும் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மோசடி நடந்தாலோ அதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

அதேபோல் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரின் எடை குறைந்தாலோ, கூடுதல் பணம் கேட்டாலோ ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது இந்தியன் ஆயில் நிறுவன பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் உடனிருந்தார்.

Next Story