குழந்தைகள் பாதுகாப்பில் ரஜினிக்கு இருக்கும் அக்கறை அனைவருக்கும் இருக்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


குழந்தைகள் பாதுகாப்பில் ரஜினிக்கு இருக்கும் அக்கறை அனைவருக்கும் இருக்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 25 Nov 2018 9:55 PM GMT)

குழந்தைகள் பாதுகாப்பில் ரஜினிகாந்துக்கு இருக்கும் அக்கறை அனைவருக்கும் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய குழு முடிந்த அளவிற்கு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறது. அனைத்து உள்பகுதிகளிலும் சென்று பார்ப்பது முடியாத காரியம். மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளை பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தற்போது யாரையும் திருப்திப்படுத்த முடியாது.

பாரதீய ஜனதா தலைவர்கள் வரவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. நான் 5 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளேன். மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் 3 முறை மக்களை சந்தித்து உள்ளார். முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தான் உள்ளார். பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

புயல் இழப்பில் உள்ள மக்களை பார்த்துச் செல்வதைவிட அவர்களுடன் இருந்து உதவி செய்ய வேண்டும். தானே புயல் பாதிக்கப்பட்ட போது எத்தனை முறை மத்திய குழு விரைவாக வந்தது. பிரதமராக இருந்த மன்மோகன்சிங் எத்தனை முறை வந்தார். அரசியல் செய்துகொண்டே இருக்கக்கூடாது.

புயல் பாதிக்கப்பட்ட முதல் நாளே பிரதமர், உள்துறை மந்திரி, சுகாதார துறை மந்திரி பேசி இருக்கிறார்கள். மத்திய மின்துறையின் உபகரணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் இணக்கமான சூழ்நிலையை கெடுத்துவிடக் கூடாது. ஏற்கனவே நொந்துபோய் உள்ள மக்களை அரசியல் காரணமாக மறுபடியும் நோகடிப்பது சரியல்ல.

குழந்தைகள் விஷயத்தில் ரஜினிகாந்த் என்ன காரணத்திற்காக அப்படி சொல்கிறார் என்று விளக்கினால் நன்றாக இருக்கும். மத்திய அரசு குழந்தைகள் பாதுகாப்புக்காக செயலாற்றி வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு என்பதில் ரஜினிகாந்திற்கு இருக்கும் அக்கறை எல்லோருக்கும் இருக்கிறது.

கடலூரில் தானே புயல் வந்தபோது மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் ரூ.100 கோடி தான் கிடைத்தது. தமிழக மக்களிடம் இருந்து ரூ.600 கோடி கிடைத்ததாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறினார். ஆனால் தற்போது நிர்வாக ரீதியாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துகொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story