கஜா புயல் பாதிப்பு; மத்திய குழுவினர் 3-வது நாளாக ஆய்வு


கஜா புயல் பாதிப்பு; மத்திய குழுவினர் 3-வது நாளாக ஆய்வு
x
தினத்தந்தி 26 Nov 2018 5:36 AM GMT (Updated: 26 Nov 2018 5:36 AM GMT)

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று 3-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

நாகை,

தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதை தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த 23-ந்தேதி சென்னை வந்தனர்.

அவர்கள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.

இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்டம் முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.

தொடர்ந்து மத்திய குழு, கஜா புயல் பாதித்த தஞ்சை பருத்தி கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தது.  ஒரத்தநாடு பகுதியில் புதூர் கிராமம் என்ற இடத்தில் உள்ள வீடுகளுக்கு சென்றும் மத்திய குழுவினர் ஆய்வினை நடத்தினர்.

இந்நிலையில், இன்று 3-வது நாளாக மத்திய குழுவின் ஆய்வு பணி தொடருகிறது.  அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் 2-வது நாளாக மத்திய குழு ஆய்வை தொடர்ந்தது. அதன்பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையின் கோவில்பத்து பகுதியில் உள்ள ஆசியாவின் 2-வது பெரிய உணவு தானிய சேமிப்பு கிடங்கில் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.  நாகையின் விழுந்தமாவடி பகுதியிலும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story