30-ந் தேதி ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க தடை ஐகோர்ட்டு உத்தரவு


30-ந் தேதி ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Nov 2018 10:00 PM GMT (Updated: 26 Nov 2018 7:40 PM GMT)

வருகிற 30-ந் தேதி ஓய்வுபெற உள்ள ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆர்.மகாதேவன், சென்னை ஐகோர்ட்டிலும், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் உள்ளனர்.

இதனால், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கு, காணொலி காட்சி மூலம் நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆஜராகி இருந்தார். அவர், ‘முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளவர்களில், ஒருவர் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் பல உள்ளன. அதற்கு ஆதாரங்களும் உள்ளன. அவர் பெயரை தற்போது கூற முடியாது. அதனால் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்றார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு விசாரணையை தள்ளிவைத்தனர். அதேபோல, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தபோது, அங்கு இருந்த பழமையான மயில் சிலை மாயமானது. இதுதொடர்பான வழக்கில், கும்பாபிஷேக ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு பிளடர் ஏ.மகாராஜா, ‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான ஆவணங்கள், 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அழிக்கப்பட்டு விட்டது’ என்றார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்போது ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், ‘நான் வருகிற 30-ந் தேதி பணிஓய்வு பெறப்போகிறேன். ஆனால், என்னை ஓய்வுபெற விடாமல் தடுக்க சதி செய்யப்படுகிறது. பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். நான் ஆவணங்களை வழங்க மறுத்து விட்டேன்.

இந்த நிலையில், என் நற்பெயருக்கும், நேர்மைக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூலமாக என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். எனக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். இதன்மூலம் என் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறீர்கள். அப்படி இருக்கும்போது, ஏன் அச்சப்படுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பொன்.மாணிக்கவேல், ‘என் மீது மட்டுமல்ல, சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்படையில் உள்ள அதிகாரிகளையும் வழக்குகளில் சிக்க வைக்க சதி செய்கின்றனர். அபாண்ட பழியை சுமத்த உள்ளனர்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மட்டும் அவரது தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள், போலீசார்கள் மீது ஐகோர்ட்டின் முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதிக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Next Story