தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை அறப்போர் நிற்காது’ வைகோ அறிக்கை


தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை அறப்போர் நிற்காது’ வைகோ அறிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2018 9:30 PM GMT (Updated: 28 Nov 2018 7:22 PM GMT)

தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை, அறப்போர் நிற்காது என்றும் வைகோ கூறியுள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது, ஆலையைத் திறக்கலாம் என்று மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை கொடுத்து இருப்பதாக வந்த செய்தி, எனக்கு ஆச்சரியத்தையும் தரவில்லை; அதிர்ச்சியையும் தரவில்லை.

இந்தக் குழு விசாரணையில் நான் முழுமையாகப் பங்கேற்றேன். இரண்டு மணி நேரம் என் வாதங்களை எடுத்து வைத்தேன். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத்தான் இந்தக் குழு அறிக்கை கொடுக்கும் என்று தீர்மானித்துக் கொண்டேன். ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தலைவர் அனில் அகர்வால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று அண்மையில் பேட்டி கொடுத்து இருந்தார். இந்த ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன்.

மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அறிவிக்கப்பட்டு அந்தக்குழு, தூத்துக்குடிக்கு வந்தபோது, நானும் சென்று இருந்தேன். பின்னர் அக்குழு, சென்னையில் நான்கு நாட்கள் இருதரப்புக் கருத்துகளையும் கேட்டது. தக்க ஆதாரங்களுடன் இரண்டு மணி நேரம் நான் வாதங்களை முன்வைத்தேன். ஆனால், அந்த அமர்வு, கருத்துக் கேட்ட முறையைக் கவனித்தபோது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்லித்தான் இந்தக்குழு அறிக்கை தரும் என்பதை ஊகித்தேன். அப்படியே நடந்து விட்டது.

இதுகுறித்துத் தீர்ப்பு அளிக்கப்போகின்ற தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் நீதிபதி கோயல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே பசுமைத்தீர்ப்பு ஆயத்தின் தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். எனவே, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் எண்ணத்திற்கு ஏற்பவே தீர்ப்பு வரும் என்பதை ஊகிக்கின்றேன். ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கும்படி, பசுமைத் தீர்ப்பு ஆயம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. ஆனால், நீதிபதி கோயல் அமர்வு ஒப்புக்காக விசாரணை நடத்தும். அது ஒரு கண்கட்டு வித்தையாகப் போகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் வாழ்வையும், தூத்துக்குடி மாநகர மக்கள் உடல்நலத்தையும் நாசப்படுத்துகின்ற ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மத்திய அரசு முனைந்து நிற்பதால் தான், ஸ்டெர்லைட் நிர்வாகத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கு, தமிழ்நாட்டுக் காவிரி தீரத்தில் இரண்டு ஹைட்ரோ கார்பன் உரிமங்களை வழங்கி உள்ளது.

தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை. நாங்கள் நடத்துகின்ற அறப்போர் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை, போராட்டம் புதுப்புது வடிவங்கள் எடுக்கும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Next Story