சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 7:56 PM GMT)

சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை கூண்டோடு மாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, 

சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஒழிப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை கூண்டோடு மாற்றம் செய்யவேண்டும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது வீட்டின் அருகேயுள்ள தனியார் ஆஸ்பத்திரி, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஜெனரேட்டரை வைத்துள்ளது. இதை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சென்னை மாநகராட்சியில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. எனவே, மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து போலீசாரையும் கூண்டோடு மாற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக நேர்மையான, திறமையானவர்களை 4 வாரத்திற்குள் நியமிக்க வேண்டும்’ என்று கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி உத்தரவிட்டார்.

மேலும், அந்த உத்தரவில், ‘சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அனைவரிடம் இருந்தும், அவர்கள் பெயரிலும், அவர்களது குடும்பத்தார் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை மாநகராட்சி ஆணையர் எழுதி வாங்கவேண்டும். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் அவற்றை அதிகாரிகள் இடிப்பது இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், ‘தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்த பின்னர், சென்னை மாநகராட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?. ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு புகார் மீது முறையான நட வடிக்கை எடுக்கப்படுவதில்லை. லஞ்சப்புகாரில் சிக்கும் அதிகாரிகளை குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தண்டிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினர்.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் தற்போது 3 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றி வருகின்றனர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதியை மட்டுமே எதிர்ப்பதாகவும், மற்ற உத்தரவுகளை பின்பற்றுவதாகவும் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Next Story