‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட “அனைத்து பகுதிகளிலும் 5 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும்” திருவாரூர் ஆய்வின்போது முதல்-அமைச்சர் பேட்டி


‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட “அனைத்து பகுதிகளிலும் 5 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும்” திருவாரூர் ஆய்வின்போது முதல்-அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 29 Nov 2018 12:00 AM GMT (Updated: 28 Nov 2018 7:59 PM GMT)

‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் 5 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும்’, என்று திருவாரூர் ஆய்வின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து புயல் குறித்த தகவல் பெறப்பட்டவுடன், ‘கஜா’ புயல் வருவதற்கு முன்பாகவே அதன் வேகத்தன்மையை அறிந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு முகாம்களில் சுமார் 82 ஆயிரம் நபர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பொதுமக்களின் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமரிடம் உடனடியாக மத்தியக்குழுவை தமிழகத்துக்கு அனுப்பி கஜா புயல் சேத விவரங்களை தெரிந்து, தேவையான நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். மத்திய அரசிடம் கோரப்பட்ட நிதி கிடைக்குமென்று நாம் எதிர்பார்க்கின்றோம்”, என்றார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வில் மக்களின் பிரதான கோரிக்கைகள் என்னவாக இருந்தது?

பதில்:- பெரும்பாலான மக்கள் விரைந்து மின்சார வசதி வழங்க வேண்டும் என்றனர். ஒருசில இடங்களில் குடிநீர் வசதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘கஜா’ புயலால் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்திருக்கிறது. எனவே மின்கம்பங்கள் ஊன்ற தேவையான குழியை பறிக்க வேண்டும். நம்முடைய மின்சார ஊழியர்கள் போர்க்கால அடிப்படையிலே மின் கம்பங்களை ஊன்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கேரளா, ஆந்திராவில் இருந்தும் மின் ஊழியர்களை வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 அல்லது 5 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.

கேள்வி:- மகளிர் குழு கடன் தள்ளுபடிக்கு வாய்ப்பு இருக் கிறதா?

பதில்:- மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டு உள்ளது.

கேள்வி:- அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைக்கிறார்கள். புயல் பாதிப்பு சீரமைப்புகளை பொறுத்தவரைக்கும் எதிர்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்களா, இல்லையா?

பதில்:- இது மக்களுடைய அரசு. மக்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அந்த துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொண்டு இருக்கிறது. போர்க்கால அடிப்படையிலே பணிகள் நடை பெறுகிறது. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இங்கேயே முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இதுபோல பணி செய்திருக்கிறார்களா? தமிழகத்துக்கு வந்த மத்திய குழுவினரே, ‘தமிழகத்தில் நிவாரண பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது’, என்று கூறியுள்ளனர். எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் பணி செய்து கொண்டிருக்கிறோம்.

மேற்கண்டவாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Next Story