டாக்டர்கள் உடன் இருந்தும் மாரடைப்பின் போது ஜெயலலிதாவுக்கு மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை பரபரப்பு வாக்குமூலம்; விசாரணை ஆணையம் அதிர்ச்சி


டாக்டர்கள் உடன் இருந்தும் மாரடைப்பின் போது ஜெயலலிதாவுக்கு மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை பரபரப்பு வாக்குமூலம்; விசாரணை ஆணையம் அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 Nov 2018 10:15 PM GMT (Updated: 28 Nov 2018 8:02 PM GMT)

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போது டாக்டர்கள் உடன் இருந்தும் மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது.

சென்னை, 

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போது டாக்டர்கள் உடன் இருந்தும் மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது. இது ஆணையத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் மயக்கவியல் துறை டாக்டர் மீனல் எம் போரா, கதிரியக்க டாக்டர் (ரேடியாலஜிஸ்ட்) சுதாகர், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் காமேஷ் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆணையத்தில் ஆஜராகினர்.

மருத்துவர் மீனல், ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ கருவி பொருத்திய மருத்துவர்கள் குழுவில் இருந்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில், ‘2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கண்களில் அசைவு ஏற்பட்டது. மெதுவாக மூச்சு விட்டார். டிசம்பர் 5-ந் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ரத்த ஓட்டம் ஓரளவுக்கு சீரானதை தொடர்ந்து இதயம் தானாக செயல்பட தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் இதயம் தானாக செயல்பட்டது. எக்மோ கருவி மூலம் ஜெயலலிதா உயிரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறி உள்ளார்.

அவரிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி, ‘ஏற்கனவே ஆணையத்தில் ஆஜரான மூத்த டாக்டர்கள் எக்மோ கருவி பொருத்திய பின்பும் ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு, ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு எதுவும் சீராகவில்லை என்று கூறி இருக்கிறார்கள். எக்மோ கருவி பொருத்திய பின்பு இதய துடிப்பு இருந்ததாக நீங்கள் மட்டும் தான் கூறுகிறீர்கள். மருத்துவமனை நிர்வாகம் உங்களை அதுபோன்று கூறும்படி அறிவுறுத்தி அழைத்து வந்துள்ளது என்றால் சரிதானா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டாக்டர் மீனல் மறுப்பு தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் காமேஷ், ‘ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர்களுக்கு நான் உள்பட 4 டெக்னீசியன்கள் உதவியாக இருந்தோம். அறுவை சிகிச்சை செய்ததும் நாங்கள் இதயத்தை மசாஜ் செய்தோம்’ என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவின் இதயத்தை மசாஜ் செய்ய மருத்துவ ஊழியர்களை டாக்டர்கள் அறிவுறுத்தியதும், அதன் அடிப்படையில் அவர்கள் மசாஜ் செய்ததும் விசாரணை ஆணையத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story