சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார் உருக்கமான பேச்சு


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார் உருக்கமான பேச்சு
x
தினத்தந்தி 29 Nov 2018 11:15 PM GMT (Updated: 29 Nov 2018 9:23 PM GMT)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார்.

சென்னை,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் உருக்கமாக பேசினார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றும் பொன் மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வுபெறுகிறார். அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். அதுபற்றி இன்று தெரியும்.

தமிழக காவல்துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்துள்ள ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நேர்மையாக பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அவரது நேர்மையான பணியால் உயிர்த்துடிப்போடு செயல்படுகிறது.

தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலை மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டது. அந்த சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்டுக்கொண்டு வரவும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்தார். சில முக்கியமான சிலைகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டன.

பழனி முருகன் கோவில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்ததையும் கண்டுபிடித்து அவர் நடவடிக்கை எடுத்தார். சிலை கடத்தல் வழக்குகளில் பிரபல சினிமா இயக்குனர் வி.சேகர், அறநிலையத்துறை அதிகாரி கவிதா, முத்தையா ஸ்தபதி போன்ற முக்கியமான பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் எடுத்த நடவடிக்கையால், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.

சிலை கடத்தல் வழக்கில் போலீஸ் துறையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் காதர் பாட்ஷா, ஜீவானந்தம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி அவர் அரங்கேற்றி உள்ளார்.

இன்று ஓய்வுபெற போகும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் 1989-ம் ஆண்டு தமிழக போலீஸ் துறையில் முதன் முதலாக பூந்தமல்லியில் டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு அப்போதைய செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் சூப்பிரண்டாக திறம்பட பணியாற்றினார்.

பிரபல கொள்ளையன் சின்னமாரி, 2 ரவுடிகள் மற்றும் 3 கற்பழிப்பு குற்றவாளிகளை இவர் என்கவுண்ட்டர் மூலம் சுட்டு வீழ்த்தினார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல்வேறு குற்றவாளிகளை கைது செய்ததில் இவர் சிறப்பாக பணியாற்றினார்.

சேலத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியபோது, ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து அதை கொலை வழக்கு என்று கண்டுபிடித்து குற்றவாளிக்கு கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்த பெருமை இவருக்கு உண்டு.

சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் இணை கமிஷனராக பணியாற்றினார். டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுப்பிரிவிலும் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளார். ரெயில்வே ஐ.ஜி.யாகவும் பணியாற்றி, அங்கும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில் சென்னை ஐ.சி.எப்.-ல் நேற்று நடந்த, ரெயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

ஒரு குற்றம் நடந்தால் அந்தப்பகுதியில் முழுமையாக களம் இறங்கி விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் உடனடியாக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளை அடித்து துன்புறுத்துவதால் மட்டும் அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது.

நான் கையாண்ட ஒரு வழக்கில் குற்றவாளியை அழைத்து எனக்கு கொடுக்கப்பட்டிருந்த இருக்கையைப்போல, அவருக்கும் இருக்கையை கொடுத்து உட்கார வைத்தேன். நான் சாப்பிட்ட உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அந்த குற்றவாளிக்கு செய்து கொடுத்தேன்.

அதன்பிறகு அந்த குற்றவாளி செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, அதனால் கிடைக்கும் தண்டனையையும் விளக்கினேன். அந்த குற்றவாளிக்கு 15 நிமிடம் கால அவகாசம் கொடுத்தேன். அந்த குற்றவாளி தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புகொண்டார். போலீசார் நினைத்தால் ஒரு குற்றவாளியைக்கூட திருத்த முடியும்.

சமூகத்தில் போலீசாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பி விட்டுச்செல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story