பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 9:28 PM GMT)

பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது குற்றவியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூர்யபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழக பால் வளத்துறை அமைச்சரே தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்திலும், கர்நாடகா மாநிலத்திலும் உள்ளன. அவைகளின் மீது தமிழக போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே பால் கலப்படம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன. முதன்முதலில் தாக்கல் செய்த அறிக்கையில் பாலில் கலப்படம் இருந்தது என்றும், அடுத்ததாக தாக்கல் செய்த அறிக்கையில் கலப்படம் இல்லை என்றும் கூறியுள்ளார். எனவே, பால் கலப்படம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘பாலில் கலப்படம் என்பது மிகப்பெரிய பிரச்சினை. பால் கலப்படம் தொடர்பாக இதுவரை எத்தனை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது?. பரிசோதனையில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளதா?. பாலில் கலப்படம் செய்தவர் கள் மீது குற்றவியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக் குனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

விசாரணையை வருகிற டிசம்பர் 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story