ஆன்லைனில் கேட்டது செல்போன்; பார்சலில் வந்தது சோப்பு வாலிபர் அதிர்ச்சி


ஆன்லைனில் கேட்டது செல்போன்; பார்சலில் வந்தது சோப்பு வாலிபர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 Dec 2018 9:45 PM GMT (Updated: 6 Dec 2018 7:26 PM GMT)

ஆன்லைனில் செல்போன் வாங்கியவருக்கு பார்சலில் சோப்பு வந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் வெற்றி (வயது 25). ஓட்டல் ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார் நிறுவன இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அந்த செல்போனை கூரியர் மூலம் பெறுவதற்காக தனது வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார்.

அதன்படி, அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதிலாக ஒரு சலவை சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. செல்போனுக்குரிய சார்ஜர், ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன. உடனே, கூரியர் நிறுவன ஊழியரை அழைத்து விவரத்தை கூறினார்.

மேலும், தான் மோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க போவதாகவும் வெற்றி தெரிவித்தார். இதையடுத்து, அந்த கூரியரை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தினார். இதனால், வெற்றி எங்கும் புகார் அளிக்கவில்லை. இதேபோல, ஏராளமான ஆன்லைன் மோசடிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

Next Story