ஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல்


ஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுப்பிய குறுந்தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2018 9:45 PM GMT (Updated: 6 Dec 2018 8:03 PM GMT)

ஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை,

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு, மோசடி சம்பவங்களும் விஞ்ஞானரீதியில் நடைபெறுகின்றன. தனிநபரின் ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை திருடி அதன்மூலம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வங்கி மோசடி குற்றங்கள் ‘சைபர் க்ரைம்’ போலீசாரை திணறடிக்கும் வகையில் அன்றாடம் அரங்கேறி வருகிறது.

எனவே வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளின்படி புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகள் ஓராண்டுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது.

செயல் இழக்குமா?

பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் ‘சிப்’ பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளிடம் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக புதிய ஏ.டி.எம். கார்டுகளை தபால் மூலம் அனுப்பிவருகிறது.

பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் ‘சிப்’ இல்லாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் ஏ.டி.எம். கார்டையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே பழைய ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி முதல் செயல் இழக்கும் என்று சமீபத்தில் தகவல் பரவியது. இதனால் பலர் அவசரமாக புதிய ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்த தகவலை மறுத்த வங்கி அதிகாரிகள் பழைய ஏ.டி.எம். கார்டுகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்திருந்தனர்.

வங்கி குறுந்தகவல்

ஆனால் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவருகிறது. அதில், ‘சிப் பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டை வங்கியில் பெற்றுக்கொள்ளவும். ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு நடைமுறையின்படி தற்போது உள்ள ஏ.டி.எம். கார்டு (‘சிப்’ இல்லாத) ஜனவரி 1-ந்தேதி முதல் செயல்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனவரி 1-ந்தேதி முதல் பழைய ஏ.டி.எம். கார்டு மூலம் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கவோ?, ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் பொருட்களை வாங்கவோ? முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story