ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சூடுபிடிக்கிறது அமைச்சர்களிடம் 17-ந் தேதி முதல் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்


ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சூடுபிடிக்கிறது அமைச்சர்களிடம் 17-ந் தேதி முதல் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்
x
தினத்தந்தி 7 Dec 2018 7:33 PM GMT (Updated: 7 Dec 2018 11:12 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், வருகிற 17-ந் தேதி முதல், அமைச்சர்களிடம் விசாரணை மேற்கொள்கிறது.

சென்னை,

மேலும் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழக உள்துறை மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், அப்பல்லோ மருத்துவமனை இதயநோய் நிபுணர்கள் டாக்டர் எம்.ஆர்.கிரிநாத், டாக்டர் ஒய்.விஜயசந்திர ரெட்டி, டாக்டர் எல்.எப்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகினர்.

இதில் டாக்டர் எம்.ஆர்.கிரிநாத்திடம் மட்டுமே நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் வக்கீல் நீண்ட நேரம் விசாரணை நடத்தி உள்ளார். பின்னர் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். இதனால் மற்ற 2 பேரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. டாக்டர் ஒய்.விஜயசந்திர ரெட்டி 10-ந் தேதியும், டாக்டர் எல்.எப்.ஸ்ரீதர் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஆஜராகுவார்கள் என்றும் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

ஆணையத்தில் ஆஜரான டாக்டர் எம்.ஆர்.கிரிநாத், தான் ஜெயலலிதாவை செப்டம்பர் 27-ந் தேதி கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், அவரது மருத்துவ குறிப்பேடுகளை பார்வையிட்டு ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கருத்து தெரிவித்ததாகவும் கூறி உள்ளார். ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி தாக்கல் செய்த கோப்புகளில் எம்.ஆர்.கிரிநாத்தின் கருத்துகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக தான் ஒரு பைசா காசு கூட வாங்கவில்லை என்று டாக்டர் எம்.ஆர்.கிரிநாத் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளார். ஆனால், அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட கோப்பில் டாக்டர் எம்.ஆர்.கிரிநாத்துக்கு ரூ.1 லட்சம் பணம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. இதை ஆணைய தரப்பில் காண்பித்து கேட்டபோதும், தான் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் வாங்கவில்லை என்று டாக்டர் எம்.ஆர்.கிரிநாத் தெரிவித்து உள்ளார்.

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சார்பில் இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், அடுத்தகட்டமாக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது.

அதன்படி, வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்வையிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்த உள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணை தேதி மற்றும் நேரம் குறித்த பட்டியல் அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் சென்று விசாரணை நடத்துவதற்காக தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கும் ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story