குடும்ப தகராறில் விபரீதம்: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொலை செய்த கொடூர தந்தை


குடும்ப தகராறில் விபரீதம்: தலையணையால் அமுக்கி 2 மகள்களை கொலை செய்த கொடூர தந்தை
x
தினத்தந்தி 7 Dec 2018 9:45 PM GMT (Updated: 7 Dec 2018 8:16 PM GMT)

கோவையில் குடும்ப தகராறு காரணமாக தலையணையால் அமுக்கி 2 மகள்களை படுகொலை செய்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை மசக்காளிபாளையம் பழனிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 46). இவருடைய மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு ஹேமாவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹேமா வர்ஷினி 10-ம் வகுப்பும், ஸ்ரீஜா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பத்மநாபன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். செல்வராணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பத்மநாபனின் தாயார் பிரேமா (63) தினமும் காலையில் வந்து சமையல் செய்து கொடுத்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

பத்மநாபனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அந்த கடனை அடைப்பதற்காக தனது மனைவியிடம் பணம் வாங்கி வருமாறு கேட்டு உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு பிரேமா சமையல் செய்வதற்காக பத்மநாபன் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லை. கதவு சாத்தி இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, ஹேமா வர்ஷினி, ஸ்ரீஜா ஆகியோர் கட்டிலில் படுத்து இருந்தனர். இதனால் குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்த பிரேமா, சமையல் செய்து முடித்தார்.

காலை 8 மணி ஆகியும் குழந்தைகள் இருவரும் எழுந்திருக்க வில்லை என்பதால் பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது எழுந்திருங்கள் என்று கூறியபடி பிரேமா, அவர்கள் 2 பேரையும் தட்டி எழுப்ப முயன்றார். அவர்கள் பேச்சு, மூச்சு இல்லாமல் படுத்து இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். இதில் பத்மநாபனின் 2 மகள்களும் இறந்து கிடப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பத்மநாபன், தனது 2 மகள்களையும் தலையணையால் அமுக்கி படுகொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. பத்மாபனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story