விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய தொழிலாளி, பஸ் மோதி பலி


விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய தொழிலாளி, பஸ் மோதி பலி
x
தினத்தந்தி 8 Dec 2018 9:00 PM GMT (Updated: 8 Dec 2018 8:30 PM GMT)

விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய தொழிலாளி பஸ் மோதி பலியானார்.

விழுப்புரம்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் செங்கல்பட்டு பகுதியில் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் சிவஞானத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவருடன் அந்த பெண் பேச மறுத்தார்.

பெண்ணுக்கு மிரட்டல்

இந்த நிலையில், அந்த பெண்ணை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானம் தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட படத்தை வைத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்து மிரட்டி வந்ததாக தெரிகிறது.

அந்த பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிவஞானத்தின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க போலீஸ் ஏட்டுகள் சுதாகர், திருமால் ஆகியோர் ஒரு காரில் செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். அவர்கள் அங்கேயே முகாமிட்டு சிவஞானத்தை பிடித்து விசாரணைக்காக அதே காரில் ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டனர்.

அந்த கார், நேற்று அதிகாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்த போது, சிவஞானம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை சாலையோரமாக நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய சிவஞானம் திடீரென போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். அவரை போலீசார் துரத்திச் சென்றனர்.

பஸ் மோதி பலி

அப்போது அந்த வழியாக வந்த பஸ், சிவஞானத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவஞானம் உயிரிழந்தார்.

இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவஞானத்தை அழைத்து வந்த போலீஸ் ஏட்டுகளிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

Next Story