மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கணக்கில் வராத ரூ.40 கோடி சிக்கியது


மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கணக்கில் வராத ரூ.40 கோடி சிக்கியது
x
தினத்தந்தி 8 Dec 2018 11:30 PM GMT (Updated: 8 Dec 2018 9:01 PM GMT)

வரி ஏய்ப்பு புகாரில் மதுபான ஆலை உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை தியாகராயநகரை சேந்தவர் ஸ்ரீனிவாசரெட்டி. தொழில் அதிபரான இவர் பாலாஜி குழுமம் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பூந்தமல்லி அருகில் மதுபான ஆலை உள்ளது.

இந்த குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 150 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலாஜி குழு நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.

ரூ.40 கோடி சிக்கியது

மதுபான ஆலை, பாலாஜி குழுமத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசரெட்டி இல்லம், நிர்வாகிகள், மேலாளர்கள் உள்பட முக்கிய அதிகாரிகளுடைய இல்லம், குழுமத்தின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்கள் வருமான வரித்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.40 கோடியும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹவாலா பண பரிமாற்றம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஹாங்காங் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ரூ.11.16 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஹவாலா பண பரிமாற்ற விவகாரத்தில் பாலாஜி குழுமத்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story