குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தடம் மாறினால் சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் நாட தி.மு.க. தயங்காது மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தடம் மாறினால் சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் நாட தி.மு.க. தயங்காது மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 7:52 PM GMT)

குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தடம் மாறினால் சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் நாட தி.மு.க. தயங்காது என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.40 கோடிக்கு மேல் மாமூல் பெற்ற குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்கும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ. அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

டி.ஜி.பி. வீடு சி.பி.ஐ. அதிகாரிகளால் சோதனையிடப்பட்டும் இன்று வரை அவர் விசாரணைக்காக அழைக்கப்படாததும், குட்கா டைரியில் இடம் பெற்றுள்ள அவர் தமிழக காவல்துறைக்கு இன்னும் தலைமை தாங்குவதும், பயிரை மேய்ந்த வேலியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

இந்நிலையில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டால் உத்தரவிடப்பட்டுள்ள இந்த விசாரணை சிறிதும் தடம் மாறிவிடாமல் சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதற்கேற்றபடி எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் சி.பி.ஐ. அமைப்பிற்கு இருக்கிறது. அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் நாடுவதற்கு தயங்காது.

சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை கவர்னர் மேற்கொள்ள வேண்டும் எனவும், குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story