ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் வீரப்ப மொய்லி பேட்டி


ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் வீரப்ப மொய்லி பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 8:27 PM GMT)

ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எம்.வீரப்ப மொய்லி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமராக பதவி ஏற்றதும் முதலாவதாக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வேன். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நரேந்திர மோடி கொடுத்திருந்தார். ஆனால் சொன்னதுபோன்று எதையுமே அவர் செய்யவில்லை. சி.பி.ஐ., திட்டக்குழு, ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் பா.ஜ.க. அரசு அழித்துவிட்டது.

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் எதிர்மாறாக 2 கோடி பேர் வேலையை இழந்து நிற்கின்றனர். பிரதமராக பதவி ஏற்ற இந்த 5 வருடத்தில் மோடியின் உண்மையான முகம் தற்போது வெளியாக தொடங்கி இருக்கின்றது.

சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகள் தான் அதனுடைய பிரதிபலிப்பு. இது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வெளியேற்றிவிட்டு, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற இருப்பதற்கான ‘சிக்னல்’ ஆகும்.

பொய்யான தகவல்

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. போர் விமானங்களில் கூடுதல் உபகரணங்கள் பொருத்தப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கொடுத்த விலையை விடவும் அதிக விலைக்கு வாங்கியது ஏன்? ரபேல் விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். ஆனால் அந்த விசாரணையை எதிர்கொள்ளாமல் நரேந்திர மோடி தப்பி வருகிறார். நாட்டு மக்களை மட்டும் அல்ல சுப்ரீம் கோர்ட்டையும் பொய்யான தகவல்களை அளித்து நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார்.

இந்திய விமானப்படை தளபதியை நான் ‘பொய்யர்’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் இதற்கு முன்பு ரபேல் ஒப்பந்தம் பற்றி சொல்லும்போது, அரசு நிறுவனமான எச்.ஏ.எல். (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ) ஒரு அங்கமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லியிருந்தார். தற்போது அம்பானி கம்பெனி ஒப்பந்தத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். அவர் மாறி, மாறி பேசுவது பற்றியே நான் கேள்வி எழுப்பியிருந்தேன். போர் விமானங்கள் பற்றி நாங்கள் எதையும் சொல்லவில்லை. ஆனால் அதனை வாங்கியதில் தான் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Next Story