12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு


12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Dec 2018 8:00 AM GMT (Updated: 22 Dec 2018 8:00 AM GMT)

12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் வேதியியல் வினாத்தாள் முன்னரே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை,

12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி  இன்று வரை நடைபெற்று வருகின்றன. கடைசி தேர்வாக வேதியியல் தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் வாட்ஸ் அப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பே வேதியியல் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. அதனை மறுத்த பள்ளிக் கல்வித்துறை அது போலி வினாத்தாளாக இருக்கக் கூடும் என விளக்கம் அளித்தது. ஆனால் இன்றைய தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளிலும், வாட்ஸ் அப்பில் வெளியானதாகக் கூறப்பட்ட வினாத்தாளிலும் 1, 3 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான கேள்விகள் உள்ளிட்ட மொத்தம் 38 கேள்விகளும் அச்சு மாறாமல் ஒன்று போலவே இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே இயற்பியல் மற்றும் உயிரியல் வினாத்தாள் வெளியானதாக சர்ச்சை எழுந்தது.

மேலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் சில மாணவர்கள் வினாத்தாள்கள் இருந்த பெட்டியை பிரித்து தமிழ் வினாத்தாளை திருட முயன்றதாக பள்ளி சார்பிலும், பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story