தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு: பலியான 12 பேர் தலை, மார்பில் குண்டு ஊடுருவியது பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு: பலியான 12 பேர் தலை, மார்பில் குண்டு ஊடுருவியது பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 23 Dec 2018 12:00 AM GMT (Updated: 22 Dec 2018 7:00 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 12 பேர், தலையிலும், மார்பிலும் சுடப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 12 பேர், தலையிலும், மார்பிலும் சுடப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஒரு இளம்பெண்ணுக்கு தலையில் பாய்ந்த குண்டு, வாய் வழியாக வெளிவந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

அவர்களின் உடல்கள், தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அந்த பரிசோதனை அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி தடயவியல் நிபுணர்கள் தயாரித்துள்ளனர். அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை ஒரு தனியார் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ளது.

அதன்படி, பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பலியான 13 பேரில், 12 பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர், பின்பக்கமாக சுடப்பட்டுள்ளனர். 2 பேருக்கு தலையில் குண்டு ஊடுருவிச் சென்றுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் மிகவும் இளையவர், 17 வயதான ஸ்னோலின் என்ற இளம்பெண் ஆவார். அவரது தலையின் பின்பக்கம் குண்டு பாய்ந்து, அவரது வாய் வழியாக வெளியே வந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குண்டு காயம் ஏற்பட்டதால், இதயம் தனது இயக்கத்தை நிறுத்தி அவரது மரணம் நிகழ்ந்ததாக உடலை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள் எழுதி உள்ளனர்.

ஜான்சி என்ற 40 வயது பெண், தூத்துக்குடி கடலோரத்தில் ஒரு குறுகலான தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சில நூறு மீட்டர் தூரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது காதில் குண்டு பாய்ந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மணிராஜன் என்ற 34 வயது வாலிபருக்கு நெற்றியின் வலப்பக்கத்தில் குண்டு பாய்ந்துள்ளது. அதனால் மூளையில் காயம் ஏற்பட்டு அவர் பலியானதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலவரத்தை ஒடுக்குவதற்கு துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த இந்திய போலீஸ் விதிகள் அனுமதிக்கிறது. ஆனால், ஆட்களை கொல்லும் வகையில் சுடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கிறது.

துப்பாக்கி பயன்படுத்தும்போது, இடுப்புக்கு கீழேதான் குறி பார்த்து சுட வேண்டும் என்றும், அதிலும் கும்பலில் பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளவர்களின் இருப்பிடத்தையே குறிவைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல்துறை விதிகள் கூறுகின்றன.

ஆனால், 12 பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டு இறந்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

துப்பாக்கி சூட்டில் 69 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 3 எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியில் இருந்து 30 தோட்டாக்களும், .303 ரக துப்பாக்கியில் இருந்து 4 ரவுண்டும், .410 ரக துப்பாக்கியில் இருந்து 12 தடவையும் சுடப்பட்டுள்ளன.

.303 மற்றும் .410 ரக துப்பாக்கிகளை கடைசி வழிமுறையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை விதிகள் கூறுகின்றன. எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி, தொடர்ச்சியாக சுடக்கூடியது. அதை பயன்படுத்துவது சட்ட விரோதம் இல்லை என்றபோதிலும், அது ‘குறைந்தபட்ச பலப்பிரயோகம்’ என்ற கொள்கைக்கு முரணானது என்று கேரளாவின் முன்னாள் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னோஸ் தெரிவித்தார்.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து கேட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ, போலீஸ் அதிகாரிகளோ, விசாரணை அதிகாரிகளோ எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

பிரேத பரிசோதனை நடந்த தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறை தலைவரும் கருத்து கூற மறுத்து விட்டார். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமமும் எதுவும் கூற மறுத்துவிட்டது.

Next Story