வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம் ரூ.3 ஆயிரம் செலுத்த சென்றவருக்கு ரூ.59 ஆயிரம் கிடைத்தது


வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம் ரூ.3 ஆயிரம் செலுத்த சென்றவருக்கு ரூ.59 ஆயிரம் கிடைத்தது
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 7:04 PM GMT)

சென்னை அயனாவரத்தில், ஏ.டி.எம். மையத்தில் ரூ.3 ஆயிரம் செலுத்த சென்றவருக்கு ரூ.59 ஆயிரத்தை எந்திரம் வாரி வழங்கியது.

சென்னை, 

சென்னை அயனாவரம் கே.கே.நகர் 14-வது செக்டார், 13-வது தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மதியம் 2.15 மணியளவில் தனது நண்பர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.3 ஆயிரம் செலுத்துவதற்காக அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ‘ஸ்டேட் பேங்க்’ ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார்.

அங்குள்ள பணம் செலுத்தும் ஏ.டி.எம். எந்திரத்தில் (டெபாசிட் மெஷின்) ரூ.3 ஆயிரம் செலுத்த முயன்றார். அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணமழை பொழிவது போன்று ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் தானாகவே வந்து விழுந்தன.

அவர் அந்த பணத்தை எண்ணி பார்த்தபோது, ரூ.59 ஆயிரத்து 800 இருந்தது.

செந்தில் அந்த பணத்தை தனது கைக்குட்டையில் கட்டினார். பின்னர் நேர்மையாக அந்த பணத்தை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் விளக்கினார். அவரின் நேர்மையை போலீசார் பாராட்டினர். பின்னர் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த சுகுமார்(49) என்பவர் தனது உறவினரின் வங்கி கணக்கில் ரூ.59 ஆயிரத்து 800 செலுத்தி உள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தை அவர் முறையாக பயன்படுத்த தவறியதால் அந்த பணம் திரும்பி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் போலீசார் உறுதி செய்து, பணத்தை சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே ஏ.டி.எம். எந்திரத்தில் கிடைத்த 59 ஆயிரத்து 800 பணத்தை நேர்மையாக ஒப்படைத்த செந்திலை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Next Story