மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்


மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 7:10 PM GMT)

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘மணல் கடத்தலில் ஈடுபட்டதாக எனக்கு சொந்தமான வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையை போலீசார் எனக்கு வழங்காததால் வாகனத்தை விடுவிக்கும்படி சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மனு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த மனு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு கனிமவளத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், அந்த சுற்றறிக்கையில் மணல் கடத்துவதை தடுக்க அதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை நடத்த வேண்டும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் கிராம நிர்வாக அதிகாரிகள், தாசில்தார்கள் மீது மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 11 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, கனிம வளத்துறை இயக்குனரின் இந்த சுற்றறிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், கனிம வளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரருக்கு போலீசார் தரப்பில் முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story