நெல்லை அருகே அரசு பஸ்கள்-வேன் மோதல்; 6 பேர் உடல் நசுங்கி சாவு குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை பஸ் கண்டக்டரும் பலி


நெல்லை அருகே அரசு பஸ்கள்-வேன் மோதல்; 6 பேர் உடல் நசுங்கி சாவு குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை பஸ் கண்டக்டரும் பலி
x
தினத்தந்தி 23 Dec 2018 8:18 PM GMT (Updated: 23 Dec 2018 8:18 PM GMT)

நெல்லை அருகே அரசு பஸ்கள் மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி இறந்தனர். குடும்பத்தினரை பார்க்க சென்ற சென்னை மாநகர போக்குவரத்து பஸ் கண்டக்டரும் பலியானார்.

நெல்லை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் இருந்து 15 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை பள்ளத்தூரை சேர்ந்த சிவஞானம் (வயது 31) ஓட்டிச்சென்றார். வேன் நேற்று அதிகாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள புலவந்தான்குளம் விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது லேசான மழை பெய்துகொண்டிருந்தது.

வேனுக்கு பின்னால் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ், வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பஸ்சும், வேனும் லேசாக உரசிக்கொண்டன. இதனால் பஸ்சும், வேனும் உடனடியாக அங்கேயே நிறுத்தப்பட்டன. வேனில் இருந்த பக்தர்கள் கீழே இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த சில பயணிகளும் கீழே இறங்கி பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தது.

அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற மற்றொரு பஸ் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நின்றுகொண்டிருந்த பஸ் நகர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், வேன் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் வேன் சில அடி தூரம் தூக்கிவீசப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 2 பஸ்களும் நொறுங்கி உருக்குலைந்தன. பஸ்சின் அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் பஸ்சுக்குள் இருந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி மரண ஓலமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அம்ஜத்குமார், முருகன், நாகர்கோவில் ஜீவாரூபி, பரமக்குடி பாஸ்கர் (34), மதுரை வாடிப்பட்டி பிரதீப் (26), பாளையங்கோட்டை தவசிமுத்து (47) என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 17 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் 4 வழிச்சாலை அதிக வழுவழுப்பாக இருந்ததாலும், மழை பெய்ததாலும் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

விபத்தில் இறந்த தவசிமுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராணி நெல்லை சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். தவசிமுத்து குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார்.

Next Story