‘ஜெயலலிதா இறப்புக்கு தி.மு.க.தான் காரணம்’ தம்பிதுரை புதிய குற்றச்சாட்டு


‘ஜெயலலிதா இறப்புக்கு தி.மு.க.தான் காரணம்’ தம்பிதுரை புதிய குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Dec 2018 9:00 PM GMT (Updated: 25 Dec 2018 8:18 PM GMT)

ஜெயலலிதா இறப்புக்கு காரணம் தி.மு.க.தான் என தம்பிதுரை குற்றம் சாட்டினார்.

கரூர்,

கரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்ற ஒன்று. இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்தது புதிராகவே உள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பி, தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவோம்.

பெங்களூரு மக்களுக்கு தண்ணீர் வேண்டும் எனில், 2 மாநில எல்லையான ஒகேனக்கல்லில் அணை கட்டலாம். இதன் மூலம் மின்உற்பத்தியும் நடக்கும். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கையாள்கிறது. தி.மு.க. அந்த கூட்டணியில் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் என தி.மு.க. கூறுவது வேடிக்கையாக உள்ளது.

வருகிற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் தான் முடிவு எடுக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்திய பிரதமரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. பா.ஜ.க.வோ, காங்கிரசோ கனவில் கூட இனி தமிழகத்தினை ஆள முடியாது.

கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது கஜா பாதிப்பின் முழு விவரத்தையும் எடுத்து கூறி நிவாரணம் கேட்போம். கஜா புயல் சேதத்தை பார்வையிட பிரதமர் ஏன் வரவில்லை? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். ஆனால் தேசிய கட்சி என்று சொல்கிற காங்கிரசின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தி புயல் பாதிப்புகளை பார்வையிட வந்தாரா?.

கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூரில் புயல் பாதிப்பு பணிகளை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் வந்தாரா?. தி.மு.க. தொடர்ந்த வழக்கே ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம். அதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ். பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருக்கும் போது அவதிப்பட்டார். பின்னர் வழக்கில் வெற்றி பெற்ற போதும் கூட, மேல்முறையீடு செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர். இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story