3-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின்-தினகரன் சந்தித்து ஆதரவு


3-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின்-தினகரன் சந்தித்து ஆதரவு
x
தினத்தந்தி 26 Dec 2018 8:26 AM GMT (Updated: 26 Dec 2018 8:43 AM GMT)

சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்க சென்ற ஸ்டாலின்-தினகரன் சந்தித்து ஒருவரையொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

சென்னை,

தமிழக அரசு பள்ளிகளில் 2009-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.

அங்கு அவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். நேற்று 30 ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று இரவு முதல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் இன்று மேலும் 6 பேர் மயக்கம் அடைந்தனர். மொத்தம் 36 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர்  தினகரன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை  திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தினகரனும்-முக.ஸ்டாலினும் டிபிஐ வளாகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

Next Story