பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும்; இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு


பேச்சுவார்த்தை தோல்வி:  போராட்டம் தொடரும்; இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:16 PM GMT (Updated: 26 Dec 2018 4:16 PM GMT)

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை,

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்தனர். உண்ணாவிரதம், அதிகளவு ரத்த தானம், உடல் உறுப்பு தானம் என்று போராட்டத்தை நீட்டிப்பது என்றும் தீர்மானித்திருந்தனர்.

இந்த நிலையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் செயலாளர் உள்பட அதிகாரிகள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அன்றைய தினம் நடக்க இருந்த டி.பி.ஐ. வளாகம் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் 2-ம் நாளாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் ‘உங்கள் போராட்டத்தை வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை ஒத்திவைக்க வேண்டும்’, என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் முதல்-அமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து உடனடியாக போராட்டத்தை முன்னெடுப்பதாக இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

இதையடுத்து டி.பி.ஐ. வளாகம் முன்பு ‘கோரிக்கைகளை நிறைவேற்று’ எனும் கோஷத்துடன் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் 500 ஆசிரியைகள் உள்பட 1,400 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டனர். ஆனாலும் அங்கிருந்தபடியே அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 16 பேர் மயங்கி விழுந்தனர்.  அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள்,  தங்கள் குழந்தைகளுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் அறிவித்து உள்ளார்.

Next Story