சிறந்த ஆராய்ச்சி பணி: 29 பேராசிரியர்களுக்கு அறிவியல் அறிஞர் விருது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


சிறந்த ஆராய்ச்சி பணி: 29 பேராசிரியர்களுக்கு அறிவியல் அறிஞர் விருது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 27 Dec 2018 11:30 PM GMT (Updated: 27 Dec 2018 7:59 PM GMT)

சிறந்த ஆராய்ச்சி பணி: 29 பேராசிரியர்களுக்கு அறிவியல் அறிஞர் விருது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, 

சிறந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட 29 பேராசிரியர்களுக்கு அறிவியல் அறிஞர் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தமிழ்நாடு அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். இம்மன்றம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பரவலாக்கத்தை இம்மன்றம் ஏற்படுத்தி வருகிறது.

இம்மன்றத்தின் வாயிலாக ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’ வழங்கும் திட்டம் 1993-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தங்களது ஆராய்ச்சியின் மூலம் பங்களித்த அறிவியலாளர்கள் கவுரவப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த விருதுகள், வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து விருது பெற தகுதியானவர்களின் முன்மொழிவுகள் பெறப்பட்டு, தமிழக அறிவியல் அறிஞர் விருது தேர்வு குழுவால் ஒவ்வொரு துறையிலும் பரிந்துரைகள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த அறிவியல் அறிஞர்கள் இவ்விருதிற்கு தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் 2015-ம் ஆண்டிற்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுக்கு முனைவர்கள் எஸ்.வின்சன்ட் (உயிரியல்), நு.முருகன் (வேதியியல்), ஆர்.இராஜேந்திரன்(சுற்றுச்சூழல் அறிவியல்), ஜி.வைஸ்லின் ஜிஜி(பொறியியல் தொழில்நுட்பவியல்), வி.ரேணுகா தேவி (கணிதவியல்), டாக்டர் எஸ்.குமரவேல் மற்றும் டாக்டர் கே.நாராயணசாமி (மருத்துவவியல்), முனைவர்கள் ஆர்.சத்தியமூர்த்தி (இயற்பியல்), எம்.செல்வம் (சமூகவியல்), ஏ.வி.ஓம்பிரகாஷ் (கால்நடையியல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

2016-ம் ஆண்டிற்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுக்கு முனைவர்கள் எஸ்.நக்கீரன் (வேளாண்மையியல்), என்.மதிவாணன் (உயிரியல்), ஆர்.ரமேஷ் (வேதியியல்), எஸ்.அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), எஸ்.கண்மணி (பொறியியல் தொழில்நுட்பவியல்), ஆர்.உதயகுமார் (கணிதவியல்), எஸ்.வெற்றிவேல் செழியன் (மருத்துவவியல்), ஆர்.ஜெயவேல் (இயற்பியல்), ஜி.ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

2017-ம் ஆண்டிற்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுக்கு முனைவர்கள் எம்.ரவீந்திரன் (வேளாண்மையியல்), எம்.மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), எஸ்.கருப்புசாமி (வேதியியல்), எஸ்.வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), பி.சிவகுமார் (பொறியியல் தொழில்நுட்பவியல்), என்.அன்பழகன் (கணிதவியல்), ஆர்.லட்சுமி நரசிம்மன் (மருத்துவவியல்), கே.ஜெகந்நாதன் (இயற்பியல்), எஸ்.கவுசல்யா (சமூகவியல்), ஏ.கே.திருவேங்கடன் (கால்நடையியல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு, தமிழக அறிவியல் அறிஞர் விருதுகளையும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்களையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர்-செயலர் இரா.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டுக்கான பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவில் தமிழக அறிவியல் அறிஞர் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பெற்ற முனைவர் ஜி.வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.

Next Story