சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு பாராட்டு விழா: விருப்பு, வெறுப்பின்றி தீர்ப்பு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுரை


சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு பாராட்டு விழா: விருப்பு, வெறுப்பின்றி தீர்ப்பு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுரை
x
தினத்தந்தி 27 Dec 2018 11:15 PM GMT (Updated: 27 Dec 2018 8:06 PM GMT)

சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், ‘நீதிபதிகள் விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையுடன் சுதந்திரமாக தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திராபானர்ஜி பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழ்கோர்ட்டுகளில் 225 சிவில் நீதிபதி காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கம், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 46 பேர் சிவில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சென்னையில் உள்ள பார் கவுன்சில் கலை அரங்கில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பெண் வக்கீல்கள் சங்க தலைவி நளினி வரவேற்றார்.

விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திராபானர்ஜி கலந்து கொண்டு சிவில் நீதிபதியாக தேர்வான 46 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீதிபதிகள் என்றால் நல்ல சம்பளம், மரியாதை கிடைக் கும் என கருதக்கூடாது. சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் நீதிபதிகளுக்கு நிறைய உள்ளது. உங்களின் மனசாட்சிக்கு உட்பட்டு யாருக்கும் சாதக, பாதகமில்லாமல், விருப்பு, வெறுப்பின்றி, சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலைமையுடன் சுதந்திரமாக தீர்ப்பளிக்க வேண்டும்.

ஒரு வழக்கில் இருதரப்பையும் நிச்சயமாக மகிழ்விக்க முடியாது. ஆனால், நீங்கள் எழுதும் தீர்ப்பு தோல்வி அடைந்த தரப்பு ஏற்றுக்கொள்ளும் வகையில் சரியான காரணத்துடன் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் எழுதும் தீர்ப்பு தெளிவாகவும், சுருக்கமாகவும் இருந்தாலே போதும். அப்போது தான், மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அதை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு பேருதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் விரைவான நீதிக்கும் வழிவகுக்கும்.

நேரம் தவறாமையை கடைபிடிப்பதுடன், தேவையில்லாமல் வாய்தாக்கள் வழங்கி காலத்தை வீணடிப்பதையும், தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காமலும் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். அப்போது தான் தீர்ப்புகளும், ஆரோக்கியமான தீர்ப்புகளாக இருக்கும்.

பல்வேறு பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலே நடத்தப்படுகிறது. பணம் சம்பாதிப்பதை இலக்காக இல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் பயிற்சி மையமாக மனிதநேயம் அறக்கட்டளை செயல்படுவது பாராட்டுக்குரியது. இதற்காக மனிதநேயம் அறக்கட்டளை நிர்வாகி சைதை துரைசாமியை மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா பேசும்போது, ‘சிவில் நீதிபதிகளாக தேர்வு பெற்றுள்ள இந்த விடியல் உங்களுக்கான விடியல் அல்ல. இது மக்களுக்கான விடியல் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சட்டத்தை வெறும் சட்டமாக பார்க்காமல் சட்டத்தின் கூறுகளை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்.

சிவில் நீதிபதிகளாக பதவியேற்கும் முன்பாகவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் வாழ்த்து பெறும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. ஆண், பெண் பேதமின்றி சிறந்த நீதிபதிகளாக நீதித்துறைக்கு உங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமியின் தலைவருமான சைதை துரைசாமி பேசும்போது கூறியதாவது:-

ஜனநாயக கட்டமைப்பை தேர்தல்களும், தேர்வுகளும் தான் முடிவு செய்கிறது. நேற்று வரை வக்கீல்களாக இருந்த நீங்கள் இன்று நீதிபதிகளாகி இருக்கிறீர்கள். நேற்று வரை பட்டதாரிகளாக இருந்த பலர் இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருக்கிறார்கள். தனித்திறன்களை பெற்றிருப்போருக்கு அங்கீகாரம் கொடுக்கும் ஜனநாயகம் தான் இந்திய ஜனநாயகம்.

மனிதநேயம் அறக்கட்டளையில் படித்தவர்களில் 3,226 பேர் இந்திய அளவிலும், மாநில அளவிலும் உயர்பதவிகளில் இருந்து வருகிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் மத்திய, மாநில அரசின் பல்வேறு பணிகளில் இருந்து வருகிறார்கள்.

சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சக மனிதர்களை உறவாக நினைப்பது தான் மனிதநேயம். நாட்டில் உள்ள அனைவரையும் சக உறவாக எண்ணி நீங்கள் பணியாற்ற வேண்டும். ஆரோக்கியத்துடனும், நேர்மையுடனும் பணியாற்றி உங்களில் யாராவது ஒருவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக வந்தால் அதுவே எங்கள் மையத்தின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.

சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு பயிற்சி அளித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா, பூந்தமல்லி கூடுதல் நீதிபதி வெங்கடேசன், மதுரை சட்டக்கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ், கடலூர் வக்கீல் பூபாலன், வக்கீல் தனசேகரன், சவுந்திரராஜன் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திராபானர்ஜி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமியின் கவுரவ இயக்குனர் எம்.கார்த்திகேயன், பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில், பெண் வக்கீல்கள் சங்க செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story