எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழுவெற்றி மு.க.ஸ்டாலின் நம்பிக்கை


எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழுவெற்றி மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2018 11:00 PM GMT (Updated: 27 Dec 2018 8:12 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என்று எந்த தேர்தல் வந்தாலும், கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரூர்,

முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க.வை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி கரூரில் நேற்று பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. அதோடு சேர்த்து சட்டமன்ற தேர்தல், அல்லது 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம். எனவே தி.மு.க. தொண்டர்களுக்கு அதிக தேர்தல் வேலை இருக்கிறது. வேலை என்றால் அதற்கான பலனான வெற்றியும் நமக்கு தான் கிடைக்க போகிறது.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி நிச்சயம் தோற்றுப்போவார் என்பதற்கு அடையாளமாக வந்திருக்கிறதா இல்லையா?. அதேபோல் தான் இந்த மாநிலத்தில் இருக்கும் ஆளும் அ.தி.மு.க.வும் வர இருக்கும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப்போகிறது. அந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க. தான் வெல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது.

தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் மீதும், தி.மு.க. மீதும் விமர்சன அம்புகளை மோடி வீச துவங்கியிருக்கிறார். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணியா? என்று அவர் கேட்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை உடைத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இரண்டாக பிரித்து, அதற்கு பிறகு 2 பேரையும் கைகோர்த்து சேர்த்து, கட்டப்பஞ்சாயத்து வேலையையா பிரதமர் செய்ய வேண்டும்?. பிரதமர் பார்க்க வேண்டிய வேலையா இது? ஒரு அரசியல் புரோக்கர் செய்ய வேண்டிய வேலை.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயிருக்கிறது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் 50 ஆண்டுகள் இந்தியா பின்னோக்கி போய்விடும். மோடி செய்த ஒரே சாதனை அதிக முறை வெளிநாடு சென்ற பிரதமர் என்பது மட்டும் தான்.

இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் விரல்விட்டு சொல்லக்கூடிய ஒரு சாதனையை கூட மோடி அரசாங்கம் செய்யவில்லை. மோடியிடம் இருந்து சலுகைகளை உதவிகளை நலத்திட்டங்களை கேட்டுப்பெறுவதற்கான துணிச்சலோ, தைரியமோ, இல்லாததாக இன்றைய எடப்பாடி பழனிசாமியினுடைய அரசு இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு எத்தனை வேலைவாய்ப்புகள், எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன?. எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது? என்று புள்ளி விவரத்தோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வைக்க முடியுமா?. எல்லாமே வெற்று அறிவிப்புகள்.

இதைவிட இன்னொரு வேடிக்கை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை பேசும் போது சொன்னார். நான் இந்த நாட்டுக்காக பலமுறை சிறை சென்றவன் என்று. எந்த நாட்டுக்காக எந்த சிறையில் இருந்தார்?. உண்மையில் சிறைக்கு தான் போகப் போகிறீர்கள். நம்முடைய செந்தில் பாலாஜி சொன்னதுபோல, ஆட்சி மாற்றம் வந்த அடுத்த நாள் அல்ல, அடுத்த வினாடியே சிறைக்கு செல்வார்கள்.

முழுவெற்றி

அதேபோல, “நானும் விவசாயி” என்று எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சொல்கிறார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டுக்கே சென்று தடை உத்தரவு வாங்கினார். இப்போது 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்வதும் கொடுமை செய்வதும் இதே விவசாயி எடப்பாடி பழனிசாமி தான். இந்த பொய்யை நீண்ட நாட்கள் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதில் அனைத்திலும் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முழு வெற்றியை பெறப்போகிறது. அதற்கடுத்த மறுநாளே எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்.

இந்த ஜனநாயக போர் நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்பும் போராக அமையவிருக்கிறது. எனவே நம்முடைய முழக்கமாக “நாடும் நமதே... நாற்பதும் நமதே” என்பது இருக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story