நவீன மருத்துவம் கிராமங்களுக்கும் சென்றடைய அரசின் நடவடிக்கைகளுக்கு டாக்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் மருத்துவர்கள் சங்க மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


நவீன மருத்துவம் கிராமங்களுக்கும் சென்றடைய அரசின் நடவடிக்கைகளுக்கு டாக்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் மருத்துவர்கள் சங்க மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 27 Dec 2018 11:00 PM GMT (Updated: 27 Dec 2018 8:35 PM GMT)

நவீன மருத்துவம் கிராமங்களுக்கும் சென்றடைய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு டாக்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

சென்னை வர்த்தக மையத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 78-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. சங்க தலைவர் டாக்டர்.திலிப் எஸ்.கோடே தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். டாக்டர் எபனேசர் பென்சம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

சங்க முன்னாள் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு உள்ளிட்ட டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்தியாவிலே மருத்துவ சிகிச்சை துறையில் தமிழகம் முதன்மை இடத்தை வகிக்கிறது. இந்த தேசிய மருத்துவ மாநாடு 25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, பல நூற்றாண்டு காலத்தின் தொடர் போராட்டத்தின் மூலம் தான் மனிதனால் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் இன்றைய வளர்ச்சியை எட்ட முடிந்தது.

மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்படும் பாதிப்புகள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு எந்த பாதிப்புமின்றி சுலபமாக சரிசெய்யப்பட்டு வருகின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழகத்தில் அதிகம் நடந்து வருகிறது. உடல் உறுப்பு தானம் வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தொடர்ந்து 4 முறை விருதுகளை பெற்றுள்ளது. சீரான சுகாதார பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் நோக்கில் பல முன்னோடி செயல் திட்டங்கள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அவருடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. அதேபோல் கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரியும், விருதுநகரில் ஒரு புதிய பல் மருத்துவ கல்லூரியும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச்சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழகம் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதால், தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வை பார்க்காமல், மருத்துவத் துறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்ப முறைகள் கிராமத்து மக்களையும் சென்றடைவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு டாக்டர்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மருத்துவ நூல்களை வெளியிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “பொது சுகாதாரத்திட்டத்தை தமிழ்நாடு மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து 15 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் 20 சதவீதம் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது” என்றார்.

துணைத்தலைவர்கள் டாக்டர் அரவிந்தகுமார், சிவா கே.மிஸ்ரா ஆகியோர் பேசினார்கள். முன்னதாக டாக்டர் ஏ.ரத்தினசாமி வரவேற்றார். டாக்டர் வினாயக் செந்தில் நன்றி கூறினார்.

Next Story