டிவி விருப்ப சேனல்களுக்கு தனிக்கட்டண உத்தரவு ஒரு மாதம் நீட்டிப்பு -ஐகோர்ட்டில் டிராய் தகவல்


டிவி விருப்ப சேனல்களுக்கு தனிக்கட்டண உத்தரவு ஒரு மாதம் நீட்டிப்பு -ஐகோர்ட்டில் டிராய் தகவல்
x
தினத்தந்தி 28 Dec 2018 10:45 AM GMT (Updated: 28 Dec 2018 10:45 AM GMT)

டிசம்பர் 30-ந் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளதாக ஐகோர்ட்டில் டிராய் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ந் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பாணை வெளியிட்டது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராயின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனித் தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்த மாதம், அதாவது ஜனவரி 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, டிராய் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story