சாத்தூரை தொடர்ந்து சென்னை கர்ப்பிணிக்கும் எச்.ஐ.வி. கிருமி ரத்தம் செலுத்தப்பட்டதா? பரபரப்பு குற்றச்சாட்டு


சாத்தூரை தொடர்ந்து சென்னை கர்ப்பிணிக்கும் எச்.ஐ.வி. கிருமி ரத்தம் செலுத்தப்பட்டதா? பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Dec 2018 10:45 PM GMT (Updated: 28 Dec 2018 11:20 PM GMT)

சாத்தூரை தொடர்ந்து சென்னையைச்சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், தனக்கும் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. நோய் தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்தார். ஆனால் இதை அரசு மருத்துவமனை டீன் மறுத்து உள்ளார்.

பூந்தமல்லி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை மாங்காட்டைச்சேர்ந்த கர்ப்பிணி ஒருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. நோய் தொற்று உள்ள ரத்தம் தனக்கு ஏற்பட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாங்காடு மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த 27 வயது பெண், நிருபர்களிடம் கூறியதாவது:-

நானும், எனது கணவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த டிசம்பர் மாதம் நான், மீண்டும் கர்ப்பம் அடைந்தேன். இதற்காக மாங்காட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தேன்.

பிப்ரவரி மாதம் எனக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது எச்.ஐ.வி. நோய் தொற்று இல்லை. 4-வது மாதம் மீண்டும் பரிசோதனைக்கு சென்றபோது உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கூறி என்னை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு எனக்கு 2 யூனிட் ரத்தம் ஏற்றினார்கள். 10-க்கும் மேற்பட்ட ஊசிகள் போட்டார்கள். 10 நாள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தேன்.

அதன் பிறகு சில மாதங்களில் எனக்கு உடலில் நமச்சல், தலைவலி, கால் வலி ஏற்பட்டது. ஆகஸ்டு மாதம் மீண்டும் பரிசோதனைக்கு சென்றேன். அப்போது எனக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக எனது கணவரையும் அழைத்து சோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. நோய் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, ரத்தம் மூலமாக இந்த எச்.ஐ.வி. நோய் தொற்று பரவும் என்று கூறினார்கள். அப்போதுதான் எனக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. உங்கள் மருத்துவமனையில்தான் எனக்கு ரத்தம் ஏற்றப்பட்டது என நான் கூறினேன். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

செப்டம்பர் மாதம் 15-ந்தேதி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. ஆனால் 1½ வயது முடிவில்தான் உறுதியாக கூற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழ்ப்பாக்கம், மாங்காடு அரசு மருத்துவமனைகளில் புகார் மனு அளித்தேன். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அதிகாரிகளும் தொடர்புகொண்டு பேசவில்லை. எச்.ஐ.வி. நோய் தொற்றுக்காக தற்போது அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறேன்.

சாத்தூர் பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவத்தை அறிந்துதான், நான் இப்போது இதனை கூறி உள்ளேன். இதுபற்றி நான் முன்பே கூறி இருந்தால் சாத்தூர் கர்ப்பிணிக்கு இந்தநிலை ஏற்பட்டு இருக்காது. எனது குழந்தையை என்னால் தூக்கி கொஞ்ச முடியவில்லை. தாய்ப்பாலும் கொடுக்க முடியவில்லை.

காய்கறி வெட்டும்போது காயம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் சமையல் செய்ய முடியவில்லை. எனது கணவரே அனைத்தையும் கவனித்து வருகிறார். உறவினர்கள் எங்களை புறக்கணித்து விடுவார்களோ? என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்தோம். ஆனால் எப்படியோ அவர்களுக்கு தெரிந்து விட்டது. தற்போது எங்கள் உறவினர்கள் யாரும் எங்களிடம் பேசுவது இல்லை. குழந்தையைக்கூட கொஞ்சுவதில்லை.

இதனால் மனம் உடைந்து தற்போது இதனை வெளியே கூறி உள்ளேன். எனக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று கிருமி வருவதற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதுதான் காரணம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குடும்பத்தை பராமரிக்க அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி மாங்காடு சுகாதார நிலையத்தில் இருந்து 27 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் ரத்த சோகை பதிப்பால் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி அவர் சிகிச்சை முடிவு பெற்று வீடு திரும்பினார்.

ஆனால் அந்த பெண் மீண்டும் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சைக்கு வந்தபோது, எச்.ஐ.வி. பரிசோதனை குறித்த அதிகாரப்பூர்வமான சான்றிதழ் அவரிடம் இல்லை. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த பெண் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எச்.ஐ.வி. நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தனி டாக்டர்கள் குழு அமைத்து இது குறித்து விசாரணை நடத்தினோம். அதில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தம் நவீன முறைப்படி பரிசோதிக்கப்பட்டு அதில் எந்த ஒரு நோய் தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டபின் தான் அவருக்கு ஏற்றப்பட்டது. இங்கு ஏற்றப்பட்ட ரத்தத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story