2 வருட காதல்: ஒரு நாள் கூட வாழாமல் இறந்து போன கணவர் வேதனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி


2 வருட காதல்: ஒரு நாள் கூட வாழாமல் இறந்து போன கணவர் வேதனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி
x

திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணமுத்துபேட்டையை சேர்ந்த பழனியப்பன் மகன் பார்த்திபன், திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த சங்கிலி முத்துவின் மகள் அனுபிரியா கடந்த 2  வருடங்களாக காதலித்து வந்தனர். காதலுக்கு பச்சை கொடிய காட்டிய பெண் வீட்டார், கடந்த 18ஆம் தேதி, இருவருக்கும் திடீரென திருமணம் செய்து வைத்தனர். 

இதை அறிந்த பார்த்திபன் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது. மனம் உடைந்த பார்த்திபன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், அனுப்ரியா வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பெண்வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், 15 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பார்த்திபன் தாய் கவிதா அளித்த புகாரின் பெயரில், பெண் வீட்டார் 5 பேர் மீது வழக்கு பதிவானது. நடந்த சம்பவங்கள் மற்றும் காதலித்து கரம்பிடித்த கணவன் தன்னுடன் ஒரு நாள் கூட வாழாமல் இறந்து போனதால், வேதனையின் உச்சத்தில் இருந்த அனுப்பிரியா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 கணவன் இறந்த ஆறே நாளில் காதல் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story