பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: டாஸ்மாக் ‘பார்’களில் நுழைவு கட்டணம் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டில் வழங்க முடிவு


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: டாஸ்மாக் ‘பார்’களில் நுழைவு கட்டணம் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டில் வழங்க முடிவு
x
தினத்தந்தி 30 Dec 2018 11:45 PM GMT (Updated: 30 Dec 2018 10:41 PM GMT)

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டில்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே ‘பார்’கள் இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய முடியாது. கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அடுத்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. எங்களிடம் இருந்து அரசு வசூலிக்கும் பார் உரிமைத்தொகையை குறைக்க வேண்டும். பெட்டிக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள் பார்கள் போல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story