கருணாநிதி சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி புகழாரம்


கருணாநிதி சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி புகழாரம்
x
தினத்தந்தி 3 Jan 2019 11:45 PM GMT (Updated: 3 Jan 2019 7:37 PM GMT)

கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் உள்பட பலரது மறைவுக்கு நேற்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்.எல்.ஏ.ஆக இருந்த ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), மறைந்த 12 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த நெல் ஜெயராமன், குறைந்த மருத்துவ கட்டணம் வாங்கிய டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன், கஜா புயலால் உயிரிழந்த குடும்பத்தினர் ஆகியோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

அ.தி.மு.க. எதிர்கட்சியாக இருந்த போதும் கூட ஏ.கே.போசின் பணி அனைவராலும் போற்றப்பட்டது. அ.தி.மு.க. அறிவித்த போராட்டங்களில் அவர் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக தி.மு.க. தலைவராகவும் இருந்த கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

இந்தி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து, நீதிக்கட்சி மேற்கொண்ட தொடர் போராட்டங்களால் 13 வயதிலேயே அவர் ஈர்க்கப்பட்டார். பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து இந்தி எதிர்ப்பு பேரணிகளை நடத்தினார். அந்த வயதிலேயே மாணவ நேசன் என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய இளமைப்பலி என்ற படைப்பு அண்ணாவை பெரிதும் கவர்ந்தது.

1957-ம் ஆண்டு முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைந்த கருணாநிதி, 13 முறை சட்டசபைக்கும், ஒரு முறை சட்ட மேலவைக்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். 1967-ம் ஆண்டில் அண்ணா அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர். 1969-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அவர் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்த பெருமைக்குரியவர்.

திருவாரூரில் அரங்கேற்றமான ‘பழனியப்பன்’ என்ற நாடகம் அவர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். தூக்குமேடை, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், நாடக காப்பியம் உள்பட பல நாடகங்களை அவர் எழுதியிருந்தார். தூக்குமேடை நாடகத்தை பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதா, கருணாநிதிக்கு கலைஞர் என்ற அடைமொழியை வழங்கினார். நளாயினி, பழக்கூடை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் கருணாநிதி எழுதியுள்ளார்.

புதையல், வான்கோழி, சுருளிமலை, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பொன்னர் சங்கர் ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். தென்பாண்டி சிங்கம் நாவல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருதை பெற்றது.

திருக்குறளை எளிய நடையில் எழுதிய குறளோவியம், கலைஞரின் முக்கிய இலக்கிய படைப்பாகும். நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை 6 தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார். சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா, இனியவை இருபது, கலைஞரின் கவிதை மழை உள்பட 178 நூல்களை அவர் எழுதியுள்ளார். தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது.

இந்திய அரசியலிலும் தனது முத்திரையை பதித்தவர் கருணாநிதி. அவரது ஆட்சிக்காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. வரவேற்று உள்ளது.

1989-ம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்றத்தில் நான் காலடி எடுத்து வைத்தபோது கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. சிங்காரம், “எம்.எல்.ஏ. இறந்தால் ரூ.50 ஆயிரம் வழங்குவதாக இங்கே அறிவித்து இருக்கிறார்கள். நம்முடைய லட்சியம் லட்சம். இந்த லட்சத்தை சட்டமன்ற லட்சியமாக அறிவிப்பதற்கு முதல்-அமைச்சர் காத்திருக்கிறார்” என்று சொன்னார்.

உடனே பதில் அளித்த கருணாநிதி, “என்னுடைய லட்சியம், எம்.எல்.ஏ. சிங்காரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழவேண்டும் என்பதுதான்” என்று சொன்னார். அந்த கோரிக்கையை அப்போது கருணாநிதி ஏற்கவில்லை என்றாலும், கோரிக்கை வைத்தவர் மனம் மகிழ்கிற வகையில் பதில் சொன்னார்.

அவர் உடல் நலம் தேறி, மீண்டும் தன்னுடைய அரசியல் பணியை செய்வார் என்று நாங்களெல்லாம் எதிர்பார்த்த நேரத்தில், மறைந்துவிட்டார் என்ற செய்தி, எங்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

அவரது அரசியல் வாழ்க்கைக்கு அவரிடமிருந்த பன்முக ஆற்றல் காரணமாக அமைந்தது. அவர் கதை வசனம் எழுதிய பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு பகுத்தறிவாளன் என்பதை சமுதாயத்திற்கு தெரியப்படுத்தினார். அதன் பிறகு அவர் கதை வசனம் எழுதிய படங்களில் எல்லாம் சமுதாய விழிப்புணர்வு கருத்துகளை பதிவு செய்திருந்தார்.

ராஜகுமாரி, மலைக்கள்ளன், மந்திரி குமாரி, பூம்புகார், மனோகரா என 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். அவருடைய ‘பொன்னர் சங்கர்’ நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது. எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய குணம் அவரிடம் அமைந்திருந்தது.

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு. கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story