நிலத்தில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


நிலத்தில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 3 Jan 2019 8:22 PM GMT (Updated: 3 Jan 2019 8:22 PM GMT)

விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவர்களுடன் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்தது.

சென்னை,

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டுவருவதற்காக 13 மாவட்டங்கள் வழியாக 16 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. பல மின் கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்த மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சென்னையில் நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விவசாய சங்க கூட்டியக்க பிரதி நிதிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை செயலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டியக்கத்தின் சார்பில் சண்முகம் உள்பட 25 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த ஜூன் 27-ந்தேதி மற்றும் டிசம்பர் 6-ந்தேதி அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை போடப்பட்ட உயர் மின் கோபுரங்களுக்கு வாடகை நியமிக்கப்பட வேண்டும். இனிமேல் அந்த திட்டங்களை கேபிள் வழியாக நிறைவேற்ற வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வற்புறுத்தினோம். ஆனால் அமைச்சர் அதை ஏற்கவில்லை.

இதுகுறித்து கடந்த 14 நாட்களாக 8 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. உயர் மின்கோபுர வாடகை சம்பந்தமாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், இழப்பீட்டை அதிகரித்து தருவதாகவும் கூறினார்.

மத்திய அரசிடம் வாடகை தொடர்பாக பேசிமுடிக்கும் வரை, உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதை ஏற்க அமைச்சர் மறுத்துவிட்டார். வாடகை நிர்ணயத்தைத் தவிர வேறு எதையும் விவசாயிகள் ஏற்கத் தயாராக இல்லை.

பேச்சுவார்த்தை விவரங்களை விவசாயிகளிடம் தெரிவித்து, அவர்களது கருத்துகளை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தில் புகுந்து உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்தால் அதை நிச்சயமாக தடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் விவசாயிகள் தொடர்ந்து சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். இரவு 9 மணிக்கு பிறகும் அவர்கள் போராட்டம் நீடித்ததால் போலீசார் நூற்றுக்கணக்கான விவசாயிகளை கைது செய்தனர்.

Next Story