தமிழையும், கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை மலேசிய கலைத்திருவிழாவில் கமல்ஹாசன் பேச்சு


தமிழையும், கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை மலேசிய கலைத்திருவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2019 11:15 PM GMT (Updated: 4 Jan 2019 9:49 PM GMT)

தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று மலேசிய கலைத்திருவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

சென்னை,

மலேசிய நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ‘ஆஸ்ட்ரோ’ சார்பில் 6-வது ஆண்டு பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று தொடங்கியது. விழாவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்து பேசியதாவது:-

தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. தமிழர் என்பது தகுதி அல்ல, விலாசம். நான் தமிழன் என்பதை மட்டுமே தகுதியாக நினைத்துவிடக்கூடாது. தகுதிக்கு வேண்டிய எல்லா பயிற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.

எத்தனையோ ஏழைகள் கலைஞர்களாக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒற்றையடி பாதையாவது போட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் காலம் வரும். நாளை நமதாகும் என்ற நம்பிக்கையில் இன்று பொங்குவது போன்று என்றும் பொங்கட்டும் தமிழ். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ‘ஆஸ்ட்ரோ’ நிறுவனத்தின் இந்திய மொழிகள் திட்டத் தலைவர் என்.சி.ராஜாமணி, மலேசிய நாட்டு துணை சபாநாயகர் ரவி, மலேசிய தூதர் சரவணன் கார்த்திகேயன், துணை இயக்குனர் லோகிதாசன் தனராஜ், எம்.எல்.ஏ. காமாட்சி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழா மற்றும் கண்காட்சி இன்றும், நாளையும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம். விழாவில் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன. கண்காட்சியில் பல்வேறு வகையான அணிகலன்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story