பொங்கல் பரிசாக ரூ.1000 - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்


பொங்கல் பரிசாக ரூ.1000 - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:09 AM GMT (Updated: 5 Jan 2019 11:52 AM GMT)

பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் அடைகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த பரிசுத் தொகுப்புடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக 1000 ரூபாய் பொங்கல் பரிசு அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ம் தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.


Next Story