தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்


தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Jan 2019 8:41 PM GMT (Updated: 6 Jan 2019 8:41 PM GMT)

தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29-ம் ஆண்டு கருத்தரங்கில் தினமலர் நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29-ம் ஆண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கடந்த 2 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகம், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், தினமலர் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்். இந்த விருதினை இரா.கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இந்திய நாணயவியல் கழகத்தின் சார்பில் பழங்கால நாணயங்கள் ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியதற்காக இரா.கிருஷ்ணமூர்த்திக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில் கூறியதாவது:-
பழங்கால நாணயங்கள் மூலம் பண்டைய மக்களின் சிறப்புகள், அவர்களின் வாழ்வாதாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் உருவாக்கிய நாணயங்கள் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்தன.

இதன் மூலம் தமிழகத்திற்கும், ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்திற்கும் வர்த்தக தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது. பழங்கால நாணயங்களில் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதால் அந்த கால மன்னர்கள் சார்ந்திருந்த மதம் தெரிய வருகிறது. விலங்குகள் மற்றும் கடவுளின் உருவம் ஒருபக்கமும் அந்த நாட்டின் மன்னர்கள் விபரங்களும் நாணயங்களில் பதிவாகி உள்ளதையும் தெரிந்து கொள்ள முடிகிறது

தென்னிந்திய நாணயவியல் கழகமும் அதன் தலைவருமான கிருஷ்ணமூர்த்தியும் நாணயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் பழம்பெருமைகளை மீட்டெடுத்து வருகின்றனர். அவர்களது முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விருது பெற்ற தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் கீழ் இந்த நிலத்தின் கலாசாரத்தை வளப்படுத்த பல நம்பகமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.

1984-ம் ஆண்டு கொடைக்கானல் சென்றபோது அங்குள்ள மார்க்கெட் பகுதியில் பழைய நாணயங்கள் உள்பட பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றேன்.

அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு நாணயத்தில் தமிழ் பிராமிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. அது பெருவளுதிழா நாணயம். அது சங்ககால அரசர்களால் உருவாக்கப்பட்டது. அந்த நாணயம் தான் நாணயவியல் குறித்த எனது ஆராய்ச்சிக்கு தூண்டுகோளாக அமைந்தது.

நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பண்டைய கலாசார ஆராய்ச்சியில் ஈடுபட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ் இந்திய நாணயவியல் கழக தலைவர் டாக்டர் ராஜா ரெட்டி ,தென்னிந்திய நாணயவியல் சங்க நிர்வாகிகள் நரசிம்மமூர்த்தி, மகாலிங்கம், ராதாகிருஷ்ணன், சத்யமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story