மே மாதத்துக்கு பிறகு தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்


மே மாதத்துக்கு பிறகு தமிழக உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2019 8:00 PM GMT (Updated: 7 Jan 2019 7:48 PM GMT)

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வருகிற மே மாதம் கடைசி வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அறிவிப்பு எப்போது?

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிபதிகள் முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ராஜா கார்த்திக், நெடுஞ்செழியன் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை செய்யும் பணி முடிந்து விட்டது. வருகிற 31-ந் தேதிக்குள் இடஒதுக்கீடு பணியும் முடிந்துவிடும். இதன்பின்னர் இனசுழற்சி ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் வாக்காளர்கள் பட்டியல் வார்டு ரீதியாக பிரித்து தயாரிக்கப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிவடைய மே மாதம் ஆகிவிடும்.

அப்போது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன், உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. அதனால், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற மே மாதம் கடைசி வாரத்தில் பிறப்பிக்கப்படும். அதன்பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்’ என்று கூறினர்.

நேரில் ஆஜராக விலக்கு

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு குறித்து அடுத்த விசாரணையின்போது விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் ஒவ்வொரு விசாரணையின் போதும், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். அவர்கள் நேரில் ஆஜராக நீதிபதிகள் விலக்கு அளித்தனர். வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story