திருவாரூரில் நாளை தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


திருவாரூரில் நாளை தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 9:10 PM GMT)

தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டத்தை திருவாரூரில் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ‘ஊராட்சி சபை’ கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன் வைத்துத்தான் நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூரில் தொடங்குகிறார்

கடந்த டிசம்பர் 24-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஜனவரி 3-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை 12,617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ‘ஊராட்சி சபை கூட்டம்’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருவதால், ஊராட்சி சபை கூட்டம் தொடங்கப்படும் தேதி மாற்றப்பட்டு நாளை (புதன்கிழமை) முதல் பிப்ரவரி 17-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் ஊராட்சி சபை கூட்டங்களை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திலும், பொருளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு காஞ்சீபுரம் மாவட்டத்திலும் நாளை தொடங்கிவைக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story