கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து பேசி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து பேசி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jan 2019 6:56 PM GMT (Updated: 22 Jan 2019 6:56 PM GMT)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை அரசு அழைத்து பேசி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட. புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர்.

அரசு ஊழியர்களின் அடுத்த முக்கியமான கோரிக்கை ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது தான். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவும், ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட சித்திக் குழுவும் அறிக்கைகளை தாக்கல் செய்துவிட்டன. அவற்றை செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு அறிவித்திருந்தால் இப்போராட்டம் நடந்திருக்காது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. நிதியாண்டு முடிவடையவுள்ளதால் அரசு அலுவலகங்களிலும் ஏராளமான பணிகள் இருக்கும். இத்தகைய சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை அரசு அழைத்துப்பேசி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்கக் கட்டமைப்பின் தூண்களாக, அரசின் ஆணி வேர்களாக இருக்கிற அரசு ஊழியர்களையே தங்களது உரிமைக்காகவும், ஊதியத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிற நிலைக்குத் தள்ளியிருக்கும் அரசின் செயல் வெட்கக்கேடானது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story