ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கோர்ட்டு உத்தரவு: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் இன்று ஆலோசனை அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு


ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கோர்ட்டு உத்தரவு: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் இன்று ஆலோசனை அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு
x
தினத்தந்தி 23 Jan 2019 8:06 PM GMT (Updated: 23 Jan 2019 8:06 PM GMT)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டமும் நடத்தி இருக்கின்றனர். 3-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தத்தை தொடருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணை முடிவில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக ஜாக்டோ-ஜியோவின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், தியாகராஜன் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

கோர்ட்டு ஆசிரியர்களை பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறியது போல, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு இந்த தேதிக்குள் அழைத்து பேச வேண்டும் என்றும் கூறி இருந்தால் இந்த தீர்ப்பை வரவேற்று இருப்போம். இப்போது வந்திருக்கும் தீர்ப்பு ஒருதலைபட்சமான தீர்ப்பாக இருக்கிறது.

இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் நாளை (இன்று) கூடி ஆலோசிப்போம். அதில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா? என்பது குறித்தும் முடிவு எடுப்போம். ஆனால் நாளை (இன்று) திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story