மேகதாது விவகாரம்: மத்திய அரசை எடப்பாடி பழனிசாமி கண்டிக்காதது வேதனை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு


மேகதாது விவகாரம்: மத்திய அரசை எடப்பாடி பழனிசாமி கண்டிக்காதது வேதனை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2019 10:00 PM GMT (Updated: 23 Jan 2019 8:11 PM GMT)

மேகதாது விஷயத்தில் கர்நாடக அரசின் முழு ஆய்வறிக்கையை பெற்ற மத்திய அரசை, எடப்பாடி பழனிசாமி கண்டிக்காதது வேதனை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில், தி.மு.க. நிர்வாகி பரணிக்குமார் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

மேகதாது

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான முழு ஆய்வு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியிருப்பதாக ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கின்றது. கர்நாடக அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அதற்கு அனுமதி தரக்கூடாது என்று சொல்லி பிரதமரிடம் எல்லோரும் கூறியிருக்கிறோம். அவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், இடையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். மத்திய மந்திரி நிதின் கட்காரியும், மத்திய அரசினுடைய அனுமதி இல்லாமல் நிச்சயமாக எந்தப் பணியும் நடக்காது, தமிழ்நாட்டினுடைய அனுமதி கேட்டுக்கொண்டுதான் நாங்கள் எதையும் செய்வோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றார்கள். கேரள மாநிலமாக இருந்தாலும் சரி, புதுச்சேரி மாநிலமாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி, கர்நாடக மாநிலமாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களையும் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று நிதின் கட்காரி தெளிவாக சொல்லி இருக்கிறார்.

முற்றுப்புள்ளி

ஆனால், தற்போது கர்நாடக மாநிலம் தன்னிச்சையாக ஒரு ஆய்வறிக்கையை, ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது. மத்திய அரசும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது அந்த செய்தி வந்த பிறகு கூட தமிழக முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இதுவரை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

ஆகவே, இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்பட முடியாத நிலையில் இருக்கின்றார்கள். எனவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் எல்லோரும் வரக்கூடிய சூழ்நிலையை பயன்படுத்தி அதற்கு ஏற்ற வகையில் நல்ல பாடத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story