2 கட்டங்களாக பணி நியமனம் ரெயில்வேயில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவிப்பு


2 கட்டங்களாக பணி நியமனம் ரெயில்வேயில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 8:18 PM GMT)

ரெயில்வேயில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார்.

புதுடெல்லி, 

ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வேயில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுவார்கள். இந்த நியமனம் 2 கட்டங்களாக நடைபெறும்.

இது தவிர்த்து மேலும் 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 பணியாளர்களை வேலையில் அமர்த்தும் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கி விட்டது.

மொத்தமாக சுமார் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிற ரெயில்வே மிகப்பெரிய துறையாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

கூடுதல் பணி நேரம், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், குறைவான செயல்திறன், மேம்படுத்துவதில் தடைகள் ஆகிய நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விடும்.

ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, கூடிய விரைவில் காலி இடங்களை நிரப்பி விடுவோம். இதன்மூலம் ரெயில்வேயில்தான் காலி இடங்கள் மிக வேகமாக நிரப்பப்படுகின்றன என்ற பெயர் கிடைக்கும்.

2014-ம் ஆண்டில் இருந்து ரெயில்வேயில் முதலீடுகள் 3 மடங்காக அதிகரித்துள்ளது. பணியாளர் தேவையும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய வளர்ச்சி காணப்படுகிறது. இந்திய ரெயில்வேயும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

15 வெவ்வேறு துறைகளில் பணி நியமனங்களின் போக்கு எப்படி உள்ளது என்பது குறித்து நாக்ரி காம் ஆய்வு நடத்தி உள்ளது. அதில் 2019-ம் ஆண்டு புதிய பணி நியமனங்கள் செய்யப்படும் என நிறுவன அதிபர்கள் கருதுகின்றனர். 56 சதவீதம் பேர் புதிய பணி நியமனம் செய்யப்படும் என கூறி உள்ளனர். 1 சதவீதம்பேர் மட்டுமே தங்கள் பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக பணி நியமனங்கள் பெருகுவதையே காட்டுகிறது.

தற்போது இந்திய ரெயில்வேயில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 598 ஆகும். 2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. மீதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 428 பணியிடங்கள் காலியாக இருக்கும்.

சுமார் 53 ஆயிரம் பேர் 2019-20 நிதி ஆண்டிலும், 46 ஆயிரம் பேர் 2020-21 நிதி ஆண்டிலும் ஓய்வு பெறுவார்கள். இதன்மூலம் மேலும் 99 ஆயிரம் காலி பணியிடங்கள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வேயில் நடைபெறுகிற பணி நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story