அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து திரை மறைவில் பேச்சுவார்த்தை பா.ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேட்டி


அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து திரை மறைவில் பேச்சுவார்த்தை பா.ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2019 10:15 PM GMT (Updated: 23 Jan 2019 8:57 PM GMT)

அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறினார்.

மதுரை,

மதுரையில் வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், “தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்து இருக்கிறது என்று பிரதமர் மோடி சொன்ன பிறகும் கூட எந்த கட்சியும் தமிழகத்தில் உங்களுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லையே? அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நீங்கள் விரும்பினாலும், அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் அதனை விரும்பவில்லையே?” என்று கேட்டனர்.

அதற்கு முரளிதரராவ், “எங்களுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்ப வில்லை என்று உங்களிடம் யார் சொன்னது? யாருடன் திருமணம் என்பதனை முடிவு செய்த பின்பு தானே வெளியில் சொல்வீர்கள். பேச்சு வார்த்தை நடக்கும் போதே பெண் யார் என்பதனை வெளியில் சொல்லி விடுவீர்களா? அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடக்கிறது. அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதனை பிரதமர் மோடி அல்லது கட்சியின் தலைவர் அறிவிப்பார்” என்றார்.

பேட்டி முடிந்தவுடன் கூட்டத்தில் இருந்த ஒருவர், “பத்திரிகையாளர்கள் அனைவரும் மோடிக்கு எதிரான கேள்விகளைத்தான் கேட்கிறீர்கள்” என்றார். இதனால் பத்திரிகையாளருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே முரளிதரராவ் தலையிட்டு, அந்த நபர் கேட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதற்காக நான் வருந்துகிறேன். உங்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லி விட்டேன், என்றார். இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நீடித்தது.

Next Story