தியேட்டர்களில் கூடுதல் கட்டண வசூலை முறைப்படுத்த நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு அதிரடி


தியேட்டர்களில் கூடுதல் கட்டண வசூலை முறைப்படுத்த நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 24 Jan 2019 10:00 PM GMT (Updated: 24 Jan 2019 7:28 PM GMT)

தியேட்டர்களில் கூடுதல் கட்டண வசூலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை, 

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து ஆய்வு செய்ய வக்கீல்கள், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் என தியேட்டருக்கு 3 பேர் வீதம் நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர்கள் தியேட்டர்களை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு ஆய்வு செய்ததன் காரணமாக, ரூ.3.53 கோடி கேளிக்கை வரி கூடுதலாக கிடைத்து உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தியேட்டர்களில் ஆய்வு செய்ய சென்ற வக்கீல் கமிஷனர்கள் 23 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மாநகராட்சி சார்பில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த ஜி.எஸ்.டி., கேளிக்கை வரித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யும்பட்சத்தில், விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story