சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 800-க்கும் மேற்பட்டோர் கைது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு


சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 800-க்கும் மேற்பட்டோர் கைது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2019 10:00 PM GMT (Updated: 24 Jan 2019 7:35 PM GMT)

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது நாளான நேற்று ஜாக்டோ-ஜியோ தரப்பில் ஏற்கனவே அறிவித்தப்படி, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

சென்னையை பொறுத்தமட்டில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி, கண்டன உரையாற்றினர். இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை கைது செய்தனர். இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிலர் தங்களுடைய பிள்ளைகளையும் போராட்ட களத்துக்கு அழைத்து வந்திருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்ட தங்களுடைய பெற்றோருடன் சென்றனர். சுமார் 200 பேர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு, கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் 20 ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்று விவாதித்தனர்.போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து சுமார் 3 மணி நேரமாக ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்துக்கு, பின்னர் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், தாமோதரன், செல்வராஜ், வின்சென்ட் பால்ராஜ் உள்பட நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையிலும் நாங்கள் அறிவித்த கால வரையற்ற போராட்டம் தொடரும். ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வருகிற 28-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அதனை பொறுத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுடைய போராட்டங்கள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story